Flash

சேலத்தில் ரயில்வே காண்ட்ராக்டர் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை

சேலம், நவ.6:

சேலத்தில் ரயில்வே காண்ட்ராக்டர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் தெருவை சேர்ந்தவர் ஆர்.கே.குமார். ரயில்வே ஜல்லி காண்ட்ராக்டர். மகுடஞ்சாவடியைச் சேர்ந்த இவர் 2 வருடத்துக்கு முன் சீரங்கன் தெருவில் வீடு கட்டி குடியேறினார்.

இந்நிலையில், நேற்று காலை சென்னையிலிருந்து சி.பி.ஐ. டி.எஸ்.பி. திலீப்குமார் தலைமையில் 10 அதிகாரிகள் சேலம் வந்தனர். காலை 6 மணிக்கு ஆர்.கே.குமார் வீட்டிற்குள் நுழைந்தனர். உள்ளே நுழைந்ததும் மெயின்கேட், வீட்டின் கதவை சிபிஐ அதிகாரிகள் பூட்டினர். வீட்டில் இருந்தவர்களை வெளியே விடவில்லை. யாரையும் வீட்டுக்குள்ளும் அனுமதிக்கவில்லை.

வீட்டின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர். காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை 6 மணி நேரம் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையை முடித்த அதிகாரிகள் வீட்டிலிருந்து வெளியே வந்தனர். ரெய்டு குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர். ஆனால் அதிகாரிகள் எந்த பதிலும் தெரிவிக்காமல் காரில் சென்று விட்டனர். ஏராளமான ஆவணங்களுடன், காண்ட்ராக்டர் குமாரையும் உடன் அழைத்துச்சென்றனர். காண்ட்ராக்டரை எங்கு அழைத்து சென்றனர் என்ற விவரம் தெரியவில்லை.

சேலம்& கரூர் அகல ரயில்பாதை அமைக்கும் பணியில் கமாரும் காண்டிராக்ட் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதில் மோசடி ஏதேனும் நடந்ததா? இதன் காரணமாக சிபிஐ போலீசார் சோதனை நடத்தினார்களா? என்பதும் தெரியவில்லை.

சாட்சியாக சேர்ப்பு?: காண்ட்ராக்டர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததும் அங்கிருந்து அன்னதானப்பட்டி போலீசுக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் சிபிஐ எனக்கூறி ஒரு கும்பல் வந்து எங்களை தாக்குகிறது என போனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனே அன்னதானப்பட்டி போலீசார் காண்ட்ராக்டர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த அதிகாரிகள் சிபிஐ தான் என ஐ.டி. கார்டை காட்டியுள்ளனர். இதையடுத்து, போலீசார் அங்கிருந்து சென்ற னர்.விழுப்புரம்&காட்பாடி இடையே கடந்த 2007ம் ஆண்டு ரயில்பாதை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார் ஒன்றை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் சாட்சியாக காண்ட்ராக்டர் குமார்சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வந்ததாகவும் கூறப்படுகிறது.

சேலம் தாதகாபட்டியில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய ரயில்வே ஒப்பந்ததாரர் குமாரின் வீடு.


























குமார்