உன் கண்களிலிருந்து வெளியேறி
துவங்கிய என் பிரிவின் பயணம்
ஏழு கடல், ஏழு மலைகளை தாண்டியும்
முடிவுறாமல் தொடர்கிறது...
வழி நெடுகிலும், வலி தொடர
கடந்து வந்த பாதையின் தூரத்தை
மரத்துப் போன கால்களைக் காட்டிலும்
கண்ணீரை தீர்த்து விட்ட
என் கண்களே அறியும்..
மரத்துப் போன கால்களுக்கும்,
வறண்டு போன கண்களுக்கும்
ஏதேதோ சமாதானங்கள் சொல்லியபடி
தொலைந்து கொண்டிருக்கிறது என் சுயம்.!
"தொலைந்து போ" என்ற உன் சொல்லை
எதிரொலித்துக் கொண்டேயிருக்கும் செவிகளையும்
தொலைய மறுக்கும் உன் பிம்பத்தை
பிரதிபலித்து கொண்டேயிருக்கும்
என் பூதக்கண்ணாடி மனதையும் தான்
என்ன செய்வதென்று தெரியவில்லை..
*******************
மறைந்துபோகா
உன் நினைவை மீண்டும்
நினைத்து நினைத்து
தொலைக்கிறேன்,
தொலைந்த என்னை
கண்டு ’கொல்லும்
உன் நினைவிற்காக
மீண்டும் மீண்டும்
தொலைகிறேன்
******************
சுலபமாய் சொல்லிவிட்டாள்
”தொலைந்து போ” வென .. !
என்னையே இழந்த பின்
என்னிடம்...
என்ன இருக்கும் மிச்சமாய்?
*************************
தலையணை மேல் முகம் புதைத்து
தினம் தினம் விதைக்கிறேன்
உன் மீதான வெறுப்பை
ஆயிரம் முறை எழுகின்ற
காதலை அழிக்க
ஆயிரத்தி ஒரு முறை
தொடர்கிறது எண்ணிக்கை
ஆயிரத்து இரண்டு ... மூன்று
*****************************
கண்விழிக்கும் காலையில்
கண் தழுவும் செல்லத் தூக்கம்
உன் நினைவைப்
போர்த்திச் சொல்லும்
”அவள் இலாத இரவை
இம்முறையும் கடந்தாயிற்று ...”
**********************************








